Entertainment

Aditi Shankar : இயக்குனர் ஷங்கரின் மகளுக்காக இப்படியும் செய்யலாமா? விருமன் படத்தில் எழுந்த சர்ச்சை

Published on

Aditi Shankar : இயக்குனர் ஷங்கரின் மகளுக்காக இப்படியும் செய்யலாமா? விருமன் படத்தில் எழுந்த சர்ச்சை

Aditi Shankar

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் திடீர் புதுவரவாக வந்துள்ளார். இவரிடம் பல திறமைகள் இருப்பதாக கூறி அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழக ஊடகங்கள் மற்ற நடிகைகளுக்கு கொடுக்காத அளவிற்கு அதிக முக்கியத்துவத்தை இவருக்கு கொடுத்து வருகின்றன.

குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு சரளமாக தமிழ் பேசும் இளம் கதாநாயகி கிடைத்துவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்.  இதன் அடிப்படையில் தற்போது இணையதள சேனல்கள்,டிவி சேனல்கள் என முழுவதும் அதிதியின் பேட்டிகளும், புகைப்படங்களும் தான் தொடர்ந்து கண்ணில் படுகின்றது.

இவர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார். இந்த படத்தில் நடிப்பு மட்டுமின்றி அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து  ‘மதுரவீரன்’ என ஆரம்பிக்கும் பாடலையும் பாடியுள்ளார். அவரை போலவே அவர் பாடிய இந்த பாடலும் ரசிகர்களால் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைப்படத்தில் பாடுவது இவருக்கு புதிலல்ல, ஏற்கனவே தெலுங்கில் தமன் இசையமைப்பில் ஒரு ரொமான்டிக் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விருமன் படத்தில் அதிதி பாடிய பாடல் தான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அதாவது இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான் என்றும், ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாகவும் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

பல மேடை நிகழ்ச்சிகளில் கிராமத்து பாடல்களை பாடிய ராஜலட்சுமி-செந்தில் கணேஷ் ஜோடிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முறையான அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் இவர் ‘விஸ்வாசம்’ படத்தில் ‘டங்கா டங்கா பாடல், சார்லி சாப்ளின்-2 படத்தில் ‘சின்ன மச்சான்’ பாடல், அசுரன் படத்தில் ‘கத்தரி பூவழகி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ‘சாமி சாமி’ போன்ற பாடல்களை பாடி பிரபலமானார்.  இவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் தற்போது ‘விருமன்’ படத்தில் ஏற்கனவே பாடிய இவரது குரலை நீக்கியது, இயக்குனர் ஷங்கரின் மகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காகவா என்று அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இது போல அவரது கணவருக்கும் ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியின் கணவரும், சூப்பர் சிங்கர்-6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான செந்தில் கணேஷ் தானாம்.  ஆனால் இறுதியில் படக்குழு அவர் பாடியதை நீக்கிவிட்டு நடிகர் விஜய்யை பாட வைத்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version